சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று பகல் 12.00 மணி அளவில் இணையதளத்தில் வந்துள்ள இ மெயில் தகவலில், ”சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் திரவ வடிவில் சோடியம் கரைசலில் உள்ளது. விமானங்களையும் விமான நிலையத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புக் குழுவினரின் அவசரக் கூட்டம் விமான நிலைய இயக்குனர் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. குறிப்பாக மும்பை, கோவா, பெங்களூர் செல்லும் விமானப் பயணிகள் அனைவரையும் வழக்கமான சோதனைகளோடு மேலும் இரண்டு முறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டது.