தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த முறை துருக்கியில் இருந்து; சென்னை விமான நிலையத்திற்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அச்சம்! - CHENNAI AIRPORT BOMB THREAT - CHENNAI AIRPORT BOMB THREAT

Bomb threat to Chennai airport: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 6:25 PM IST

சென்னை:சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு இன்று காலை 8.50 மணிக்கு வந்த இ- மெயில் தகவலில், “சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடித்து சிதறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து விமான நிலைய இயக்குநர், அலுவலக ஊழியர்கள், வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர்கள் குழு ஆகியோருக்கு அவசர தகவல்கள் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்தது. அந்தக் கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல், வழக்கமான புரளியாக தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில், சந்தேகப்படும்படியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

துருக்கியில் இருந்து வந்த மிரட்டல்:இதற்கிடையே சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த இ - மெயில் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கடந்த இரண்டு வாரங்களில் இதுபோன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதுவரை தொலைபேசி மூலமாகவும், இ-மெயில், இணையதளம் மூலமாகவும் ஆறு முறை இந்த மிரட்டல் புரளிகள் வந்துள்ளன. மேலும், இதுவரை வந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் புரளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி கொண்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற புரளியை திட்டமிட்டு தொடர்ந்து கிளப்பிவிடும் நபர்களை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தெரிவித்துள்ளோம் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு! - chennai airport flights delay

ABOUT THE AUTHOR

...view details