சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்றிரவு வந்த இ- மெயிலில் ''சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.. அவைகள் வெடித்து சிதறும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து விமான நிலைய இயக்குனர், அலுவலக ஊழியர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுக்கு அவசர தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல், வழக்கமான புரளியாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள், சோதனைகள் நடந்தன.
மேலும், விமான நிலைய வாகனங்கள் நிறுத்துமிடம், விமானங்களுக்கு எரி பொருட்கள் நிரப்புமிடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றுமிடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் தொலைபேசி மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் 5 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. வந்த அனைத்துமே புரளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய தரப்பில், இந்த முறை வந்த மிரட்டலும் புரளியாக இருக்கலாம்.. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளை தொடங்கி நடத்தினோம். இதனால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற புரளியை திட்டமிட்டு கிளப்பி விடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் காவல்துறை மூலமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது!