திருநெல்வேலி: இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்தின் 119ஆம் ஆண்டு தங்க தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
பழமையும், பெருமையும் மிக்க இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலயம் திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள மலையில், லூர்து அன்னை காட்சி கொடுத்த நிலையில், அந்த மலையின் சிறுபகுதியானது இங்குள்ள கெபியில் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருவது இதன் தனிச்சிறப்பாகும்.
பாய்மர படகு போட்டி (ETV Bharat Tamil Nadu)
இந்த ஆலயத்தில், 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்க தேரோட்ட திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 119-ஆம் ஆண்டு, 16 ஆம் ஆண்டு தங்க தேரோட்ட திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேரோட்டம் நாளை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு எட்டாம் நாள் திருவிழாவான இன்று (பிப்ரவரி 10), உள்ளூர் மக்களுக்கான பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. போட்டியானது, குமரி மாவட்டம் கோவளம் முதல் இடிந்தகரை வரை நடைபெற்றுள்ளது. இதில், 10-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் பங்கேற்றுள்ளன. தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த அனீஷ் குழுவினருக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற ஜவஹர் குழுவினருக்கு ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் இடம் பெற்ற ராஜேஷ் குழுவினருக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அணியினரை ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.