கோவை:நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும். நட்சத்திர பேச்சாளர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, குடும்ப ஆட்சி நடத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு அளிப்பதில் வியப்பில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் செல்கிறது, தமிழக காவல்துறை. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமானத்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அமலாக்கத்துறை, வருமானத்துறை நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தான் கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா, ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்ய முடியாது.