கோயம்புத்தூர்: கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இதில், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகளை எழுப்பினார்.
வானதி சீனிவாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது அவர், “இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதேபோல, பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால், பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18% ஜிஎஸ்டியா?” என பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குனர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் விஸ்வகர்மா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை திமுக அரசு புறக்கணிக்கிறது. கைவினைக் கலைஞர் நலன்களை திமுக அரசு புறக்கணிக்கிறது. ரூ.15 ஆயிரம் மத்திய அரசு உபகரணங்கள் வாங்க இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு மீது இருக்கக்கூடிய காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க:நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு.. "இரவு முழுவதும் தூக்கமே இல்லை" என வேதனை
பாஜக போராட்டம்:செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, தமிழக அரசு இந்த திட்டத்தை தொடங்க வேண்டும். 17ஆம் தேதி அறிவிக்காவிட்டால், திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தபடும். GST பிரச்னை குறித்து குறைகளை கேட்பதற்காக டெல்லி இருந்து மத்திய அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.
அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் விவகாரம்:அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் பேசும் போது நான் ஹோட்டலுக்கு வந்து காப்பி சாப்பிடுவேன், ஜிலேபி சாப்பிடுவேன், சண்டையும் போடுவேன் என்று கூறினார். அதை கேட்ட எனக்கு அங்கேயே நான் எத்தனை முறை ஹோட்டலுக்கு வந்திருக்கேன் என்று பதில் தந்திருக்க முடியும். நான் ஜிலேபி சாப்பிட்டிருக்கேன் என்று சொல்லி இருக்கிறார்.
நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்னையில் ஈடுபட்டதோ இல்லை. என்னால் உடனடியாக அவருக்கு பதில் அளித்திருக்க முடியும். ஆனால் நான் விரும்பவில்லை. இதனையடுத்து மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.
மன்னிப்பு: நான் பேசின விஷயம் தவறுதான், தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். நான் பேசியது சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக வைரலாகி விட்டது. உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து, நான் ஆர்எஸ்எஸ் சார்ந்தவன் என்று பல்வேறு விஷயங்களைப் பேசினார். அதன் பின்னர் அமைச்சரும் பேசினார். அப்போது உங்கள் தொகுதி எம்எல்ஏ கடையில் என்ன சாப்பிட்டார் என்பது குறித்து கூறலாமா? என்று கேட்டார். இதற்கு அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர், நீங்கள் ஒரு சகோதரி மாதிரிதான் என்று கூறி மன்னிப்பு கேட்டார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் என்பது சவால் நிறைந்த பாதை. நான் பெண் என சலுகை கேட்கவில்லை. மேடையில் ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏவாக இருந்தால் இந்த பேச்சு வருவதற்கு வாய்ப்பு இருக்கா? மாநில அமைச்சர் யாராவது இப்படி குறைகளை வந்து கேட்டு இருக்காங்களா? சமுதாயத்தின் பார்வையில் எவ்வளவு உயர்வுக்கு போனாலும், பெண் தான் என்று ஒரு பார்வை இருக்கு.
இதையும் படிங்க:'கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டுள்ளார்' - ராகுல் காந்தி கண்டனம்
சாதி வர்ணம் பூசும் திமுக: நாங்கள் மிரட்டி அழைத்து வந்து அவரிடம் மன்னிப்பு வாங்கினோம் என்பதில் உண்மை இல்லை. இதில் சாதி பற்றியும் பேசி வருகிறார்கள். ஆணவத்தில், அதிகாரத்திரத்தில் என்ன வேண்டுமானலும் செய்ய வைப்பீங்களா என சமூக வலைத்தளத்தில் பதிவு போடுகின்றனர். சாதி வர்ணம் பூசும் வேலையை திமுக செய்து கொண்டு இருக்கிறது.
அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் நாங்கள் மிரட்டி மன்னிப்பு வாங்கினோம் என்பது தவறு. நீங்கள் வேண்டும் என்றால் அன்னபூர்ணா உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். நிர்மலா சீத்தாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ யார் வேண்டுமானலும் வெளியில் விட்டு இருக்கலாம். நாங்களை யாரையும் குறி வைத்து பேசத் தேவையில்லை. ஹோட்டல் நிர்வாகத்தையோ, ஹோட்டல் நிறுவனரிடம் கேளுங்கள். நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கவில்லை. மத்திய நிதி அமைச்சரை காங்கிரஸ் மற்றும் திமுக குறி வைக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.