சென்னை:தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் இந்தளவுக்கு மரணங்கள் நிகழ்ந்ததில்லை. இதுதான் திராவிட மாடல் அரசா?. இந்தப் பிரச்சினையை தவிர்த்துவிட்டு யாரையாவது அடையாளம் காண்பித்து பலிகடாக்கிவிட்டு தப்பித்துக்கொள்ள திட்டமிட்டால் அது நடக்காது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுதான் தொடக்கம். உரிய சீரான நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். முதலமைச்சரின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கையாலாகாத அரசாக உள்ளது. இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக கடந்த மே மாதம் கூறினார். இப்போது அந்த இரும்புக்கரம் எங்கு சென்றது எனத் தெரியவில்லை.
திமுக முக்கிய பிரமுகர்கள் காவல் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அரசிடம் இருந்து அழுத்தம் வந்ததாக கூறினால், அமைச்சர்களிடம் இருந்து வந்ததாகதான் அர்த்தம். மாவட்ட கண்காணிப்பாளர் விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டார். கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்து அவர் விருப்ப ஓய்வு பெறும் அளவிற்கு சென்றுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நேர்மையாக இருந்த காவல் அதிகாரி ஒருவரை திமுக சட்டமன்ற உறுப்பினர் தகாத வார்த்தையில் பேசியதால் அவர் பணி மாறுதல் பெற்று சென்றுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தின்போதும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டும் தற்போதுவரை ஒன்றும் நடக்கவில்லை. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மீதே நம்பிக்கை அவருக்கு நம்பிக்கை இல்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விபத்து அல்ல. அது படுகொலை. சிபிசிஐடியின் விசாரணையில் உண்மை வெளிவராது. தமிழக முதலமைச்சர் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கேட்டுள்ளார். மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிபிஐ விசாரணை வேண்டும் என கடிதம் எழுதி உள்ளார். மாநில அரசுக்கேட்டால் மட்டுமே சிபிஐ விசாரணை நடத்த முடியும்.
'முதல்வர் பதவி விலகியிருக்க வேண்டும்': அரசியல்வாதிகளின் துணையின்றி கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. காவல்துறையினர் தற்போது தொடர்ந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் காவல்துறையினருக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்தோ, விற்பனை குறித்தோ முன்னரே தெரிந்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனக்கு கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி வழங்கவில்லை என கூறுகிறார். கள்ளச்சாராய இறப்பிற்கு பின்னர் காவல்துறையினர் மாற்றப்படுகின்றனர். காவல்துறை தோல்வியடைந்துவிட்டது என்றால் முதலமைச்சர் தோல்வியடைந்துவிட்டதாகத் தான் அர்த்தம். முதலமைச்சருக்கு பொறுப்பு உள்ளது என்றால் முதலமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும்.
கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுகு பணம் அளிப்பது என்பது தீர்வாகாது. பொறுப்பேற்க வேண்டியவர்கள் பணம் அளிப்பது என்பது என்கிற முறையில் தமிழக அரசு செய்வது தவறு தான். பாரபட்சமற்ற விசாரணைக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் கோரிக்கை வைக்க வேண்டும். காவல்துறையை அரசியல்வாதிகள் தன் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது. அரசியல்வாதிகளின் தலையாட்டி பொம்மையாக காவல்துறையினர் இருக்க கூடாது.
சமூகப் போராளிகள் என கூறியவர்களும், வைரமுத்துவும் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. நிறைய சினிமா நடிகர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை. ரெட் ஜெய்ன்ட், சன் பிக்சர்ஸ் இருக்கும் வரை நடிகர்கள் வாய்திறக்க மாட்டார்கள். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவை குண்டுக்கட்டாக வெளியேற்றியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. திராவிட மாடல் என்பதே கேவலமான ஒன்றாகத்தான் உள்ளது. தயாநிதிமாறன் அநாகரிமாகப் பேசுகிறார்.
இதனையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பிரதமர், நிதியமைச்சர், பாஜக மாநில தலைவர் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். சட்டப்பேரவையில் அதுகுறித்து பேச அனைவருக்கும் உரிமை உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மரணங்கள் நிகழலாம்'.. கள்ளச்சாராய இறப்புகளை முன்பே கணித்து விஆர்எஸ் வாங்கினாரா எஸ்பி மோகன்ராஜ்? - kallakurichi ex sp mohanraj