கோயம்புத்தூர்: கோவையில் பாஜகவின் மாநில நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.4) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்தி 'ராமஜென்ம பூமி'-யில் ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்யும் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழுமன திருப்தியோடு நிறைவேற்றியுள்ளது. இதனால், மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருக்கிறது.
இன்றைய தினத்தில் இருந்தே 'கிராமம் செல்வோம் நிகழ்ச்சி' துவங்கியிருக்கிறது. ஒருவார காலத்திற்குள் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியலுக்கு திசைக்கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அது எல்.கே.அத்வானி தான். பாஜகவை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர் இவர். அரசாங்கம் அவருக்கு 'பாரத ரத்னா விருது' கொடுப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற பணியாளர்கள் இதன் மூலம் உற்சாகம் பெற்று தேர்தல் பணியாற்ற தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியா கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது குறித்த கேள்விக்கு, "அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பதில் ஒரு பெரிய புரிதல் நமக்கு வராமல் இருந்தது. I.N.D.I.A என்ற புள்ளி வைத்த கூட்டணியாக இருந்ததை தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதன் கன்வீனரே அதில் இல்லை என்ற அளவிற்கு உள்ளதென்றால், அதற்கு குறிக்கோள் இல்லாமல் அமைகின்ற கூட்டணிகள் நிலைக்காது என்பதே காரணம்.
மோடியை நீக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். அதைத் தவிர்த்து வேறு ஏதேனும் குறிக்கோள்கள் இருக்கிறதா? அஜெண்டா ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால் அதுவும் இல்லை. அதனால் தற்போது, அந்த கூட்டணியே திசைத் தெரியாமல் போனது. மேலும், அந்த கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சியின் தலைவரான மம்தாவே, 'காங்கிரஸ் கட்சியினர் 40 சீட்டுகள் கூட ஜெயிக்க மாட்டீர்கள்' என்கிறார் என்றால் அவர்களின் லட்சணம் என்னவென்று அவர்களுக்குள்ளேயே தெரிந்து வைத்துள்ளார்கள்' என்று குற்றம்சாட்டினார்.