தஞ்சாவூர்: கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து திமுக ஓட்டுக்களை அறுவடை செய்தது. இந்த தேர்தலிலும் அந்த அறுவடையை திரும்ப செய்ய முடியுமா என்ற முயற்சியில் தான் 29 பைசா கதை வந்துள்ளது. பிரதமரை 29 பைசா என்று பேசுவேன் என்று கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என்று கூறுவோம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினுடன் இணைந்து, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கும்பகோணம் இராமசாமி கோயில் அருகேயுள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மகளிரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதை மகளிரணி தலைவியாக வரவேற்கிறேன். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எத்தனை பேர் வென்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளை போலவே நாடாளுமன்றம் சென்று பென்ஜை தான் தேய்பார்கள்.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியாவுக்கே தான் தான் வழிக்காட்ட போவதாக பேசி வருகிறார். தமிழ்நாட்டை தாண்டி செல்வாக்கு இல்லாத முதலமைச்சர் இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக கூறுவது நகைப்புக்குரியது. கற்பனை உலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்கிறார். தமிழகத்தில் பாஜக எங்களுக்கு போட்டி இல்லை என்று கூறி விட்டு, ஒவ்வொரு நாளும் பாஜகவை வைத்து திமுக அரசியல் செய்துக்கொண்டு இருக்கிறது.