திருநெல்வேலி: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது, "மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணியினர் போர்க்கொடி தூக்குகின்றனர். ஆனால், அவர்கள் ஆளும் தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளின் வாசல்களில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை" என்றார்.
தமிழக பாஜக குழுவில் உங்களுடைய பெயர் இடம் பெறவில்லை என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "பாஜக தலைமை முடிவு செய்து ஒரு குழுவை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் தற்போது டெல்லி சென்றுள்ளார்" என்றார்.
விஜயை கண்டு திமுக பயப்படலாம்: நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காத நிலையில், விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா? என்ற கேள்விக்கு, "யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம், விஜயை கண்டு திமுக பயப்படலாம்" என்றார்.