கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட புதிய நிழல் குடையை (Bus Stand) இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; '' கோவை தெற்கு தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் அதிக அளவு திறக்கப்பட்டுள்ளன. பழைய அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக இரண்டு அங்கன்வாடி மையங்களை இன்று திறந்து வைக்க இருக்கிறோம். நாளையும், நாளை மறுதினமும் தமிழக முதல்வர் கோவை வருகிறார். ஏற்கனவே அவர் கோவை வந்த போது, கோவை தொடர்பான கோரிக்கைகள் அவரிடம் கொடுத்திருந்தோம்.
அதில் ஒரு சில விஷயங்களுக்கு அரசின் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும் பொழுது, ஒரு சில இடங்கள் முழுமையாக காலி செய்யப்படாமல் இருக்கின்றது. நில உரிமையாளர்கள் அதில் இருக்கின்றனர். அதனால் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிலத்தை ஒப்படைக்கின்ற பொழுது முழுமையாக காலி செய்து ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வரும் முதல்வரிடம் கேட்க இருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க:'ஆடை கட்டுப்பாடை மீறுவது சட்டவிரோதம்'.. உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு..!
விஜய் vs சீமான்
தொடர்ந்து பேசிய அவர், ''விஜய் குறித்து சீமான் கூறியுள்ள கருத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னொரு தலைவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய உதயநிதி ஸ்டாலின் அந்த ரகசியம் தெரியும் என்றும் சொன்னார். மூன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. எது சாத்தியம் என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம்'' எனக்கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்புக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை குறித்து கேள்விக்கு, '' ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் கருத்து கேட்டு, அதற்கென்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து பார்க்க வேண்டும். எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக பேசக்கூடாது. விஜயும், ஒரே நாடு ஓரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை கூறுகிறார்கள் என்றால், அதையும் விஜய் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை ஸ்டடி பண்ண வேண்டும்'' என்றார்.
பிராமண சமூகத்தின் மீது அவதூறு பரப்பப்படுகிறது என குற்றம் சாட்டிய வானதி சீனிவாசன், '' பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் மீது ஒன்றை வைத்தால் அவர்களை பாதுகாக்க சட்டம் இருக்கிறது. பிராமண சமுதாயத்திற்கு இல்லை. பிரமாணருடைய மொழியை கேவலப்படுத்துவது, பிராமண சமூகத்தை அவதூறு படுத்துவது என தொடர்கிறது'' என்றார்.
அமைச்சர்கள் ஆடை கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, '' துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னங்களை பயன்படுத்துவது என்பது சரியானது அல்ல. விமர்சனங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
அமரன்
தொடர்ந்து பேசிய அவர், ''ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக அரசு தான் அமையப்போகிறது. வயநாடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அமரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது. ராணுவ தொடர்பாக தெரிந்து கொள்ள இது இளைஞர்களுக்கு வசதியாக இருக்கும். பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். இதில் கூடுதல் சந்தோசம் என்னவென்றால் இது போன்ற படங்களை கமலஹாசன் தொடர்ந்து தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவி மூலம் வெளியிட வேண்டும். அவர்களுக்கு வியாபாரம் ஆகட்டும். அதே வேளையில் மக்களுக்கும் நல்ல விஷயங்கள் செல்லட்டும். இந்த படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். மாநில முதல்வர் ரசித்த படத்தை தமிழகத்தின் மாணவச் செல்வங்கள் ரசிக்க வேண்டும், வரி விலக்கு கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்