சென்னை: ஆளுநரின் பேச்சு திமுகவின் சிந்தாந்தத்திற்கு எதிராக உள்ளது என்ற காரணத்தினால் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அவரை அவமானப்படுத்த திமுக நினைக்கின்றது எனவும், எமர்ஜென்சி காலத்திற்கு மீண்டும் திமுக அரசு தமிழக மக்களை எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டப் பின்னர் செய்தியார்களைச் சந்தித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது, “ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என கேட்டார். அதற்கு திமுக அரசு இப்படி நடந்து கொள்வது முதல் முறை அல்ல. ஆளுநரின் பேச்சு திமுகவின் சிந்தாந்தத்திற்கு எதிராக உள்ளது என்ற காரணத்தினால் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அவரை அவமானப்படுத்த திமுக நினைக்கின்றது.
வானதி சீனிவாசன் பேட்டி (ETV Bharat Tamilnadu) எமர்ஜென்சி காலத்திற்கு அழைத்துச் செல்லும் திமுக:
ஆளுநரை அச்சுறுத்தி அவருடைய செயல்பாடுகளிலிருந்து பின்வாங்க வேண்டும் என மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் நேரலை செய்ய அனுமதிப்பதில்லை. எமர்ஜென்சி காலத்திற்கு மீண்டும் திமுக அரசு தமிழக மக்களை எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.
தேசிய கீதம் பாடுவதில் ஏன் எரிச்சல் வருகிறது?
இந்த போஸ்டர், ஆர்ப்பாட்டம் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. தேசிய கீதத்தை அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டம். ஆளுநர் வருகை புரியும் போதும், முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் பாடப்படுவது மரபு. இதை ஏன் மறுக்க வேண்டும். தேசிய கீதம் பாடுவதில் ஏன் எரிச்சல் வருகிறது? தமிழ் தாய் வாழ்த்து முதன் முதலில் திமுக கொண்டு வரவில்லை. தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என ஆளுநர் கூறினால், நாம் ஏன் கேட்க வேண்டும் என திமுக அரசு இதை பெரிதாக்குகிறது.
இதையும் படிங்க:"கடமை தவறிய எடப்பாடி பழனிசாமி" - செல்வப்பெருந்தகை பகிரங்க குற்றச்சாட்டு!
மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி:
அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்தியாவில் அதிக கடன் வாங்கிய அரசாக உள்ளது. இது குறித்த கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஆளுநருடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.
சட்டப்பேரவை நேரலை விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளை நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் சட்டமன்றத்தில் பேசும்போது நேரலை வருவதில்லை. நாங்கள் கேட்கும் கேள்வி முழுவதுமாக வருவதில்லை. ஆனால், அமைச்சர்களின் பதில் முழுமையாக வரும். திமுகவுக்கு ஆதரவாக பேசினால் போராட்டத்திற்கு அனுமதி. இல்லை என்றால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறுகின்றனர்.
தங்களுடைய நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை திமுக அரசு உணர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான், மக்கள் பிரச்சினை பற்றி யாரு பேசினாலும் பதற்றம் அடைகின்றனர். அனுமதி கொடுக்க வேண்டிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. மாணவிகள் கருப்பு துப்பட்டா போடுவதைப் பார்த்து பயப்படுகின்றனர். தமிழக மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர் என்பதை உணர்ந்துள்ளனர். பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டியவர்களுக்கு, கருப்பு பிடிக்கும் தானே, ஏன் பயப்படுகிறீர்கள்?” நெஅ கேள்வி எழுப்பியுள்ளார்.