சென்னை: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அவரது ஹோட்டல் நிர்வாகியான மணிகண்டன் மற்றும் நெல்லை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்த முரளிதரன் ஆகிய மூன்று பேரும் நேற்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டதாகவும், மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பிறகு நேற்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தொலைக்காட்சிகளில் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாகவும், எத்தனையோ வழக்குகள் நாட்டில் இருக்கும் போது தொடர்ச்சியாக தவறான செய்தியை போடுவதன் காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கோவையில் காவல் ஆய்வாளர் என கூறி பெட்டி கடைக்காரரிடம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கியவரோடு எனது புகைப்படத்தை இணைத்து செய்தியாக போடுகிறார்கள். நல்ல செய்தியை சொல்ல வேண்டியதை விட்டு விட்டு தவறான செய்திகளை போட்டு வருகிறீர்கள். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் நடந்து வருகிறது. அதை எந்த ஊடகமும் பெரிது படுத்துவது இல்லை. ஆனால் 4 கோடி ரூபாய் செய்தியை நான்கு மாதமாக போடுவதற்கு காரணம் என்ன.? என் மீது ஏதும் காழ்ப்புணர்ச்சி உள்ளதா என்றார்.