தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலை; திமுகவுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி! - Indira Gandhi statue issue

Karate R Thiagarajan: இந்திராகாந்திக்கு சிலை அமைப்பது குறித்த சர்ச்சைகளும், செண்டிமெண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு நன்றாக தெரியும். இந்நிலையில், இந்திராகாந்திக்கு சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது? என்று தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கராத்தே ஆர் தியாகராஜன் புகைப்படம்
அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கராத்தே ஆர் தியாகராஜன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 7:12 PM IST

சென்னை:தமிழக சட்டமன்றத்தில் நேற்று (ஜூன் 24) செய்தித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் இந்திராகாந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் சாமிநாதனும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இந்திராகாந்தி சிலை அமையும் அண்ணா சாலை ஸ்பென்சர் பகுதியை பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு, தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழக சட்டமன்றத்தில் ரூ.50 லட்சம் செலவில் இந்திராகாந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் கேள்வி:இந்தியாவில் எமெர்ஜென்சியை இந்திராகாந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் 25. அதில், அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான். இந்நிலையில், இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா? என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது. அதேபோல, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை நினைவுப்படுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24ஆம் தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா? என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்திராகாந்தி சிலையை சுற்றும் சர்ச்சைகளும், செண்டிமெண்டும்:அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா, இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986-ல் அனுமதி கோரினார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து, அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அமிதாப்பச்சன் அரசியல் வாழ்க்கை சரிவு:அதன்படி, அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. ஆனால், இந்திராகாந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்கிய நிலையில், தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது தொடர் சரிவுகளை சந்தித்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் படிப்படியாக அரசியலில் இருந்து விலகினார். சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி நீக்கம்:இதனையடுத்து, அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஏசைய்யாவிடம், அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை, தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, அனுமதி மாற்றி பெறப்பட்டது. ஆனால், சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் அவரது காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி பறிபோனது.

ராஜீவ் காந்திக்கு சிலை:இதனையடுத்துஅன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்திரா காந்திக்கு சிலை வேண்டாம், ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனையை தெரிவித்தார். அதன்படி, இந்திராகாந்திக்கு சிலை அமைப்பது குறித்த முயற்சி கைவிடப்பட்டு, சென்னை சைதாப் பேட்டை சின்னமலையில் ராஜிவ்காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. அவை, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில், ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜிவ்காந்தி சிலையை பிரதமர் நரசிம்மராவ் திறந்து வைத்தார்.

ஏசைய்யா மறைவு:இந்த நிலையில், திமுக - த.மா.கா கூட்டணி 1996-ல் அமோக வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து, இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பது குறித்து பேசினார் ஏசைய்யா. அதன்படி, சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன் பணமாக ரூ.3 வட்சம் வழங்கினார். சிலை அமைக்கும் பணி துவங்கியதவுடன், மூப்பனார் பல பிரச்சனைகளை சந்தித்ததுடன் மறைந்தும் போனார். இதனையடுத்து, இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணியும் துவக்கத்திலேயே முற்றுபெற்றது.

இந்நிலையில், மீண்டும் தற்போது இந்திராகாந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு, சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதனை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றுள்ளார். புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டு காங்கிரசில் தஞ்சமடைந்து, தலைவராகவும் வந்துவிட்ட செல்வப்பெருத்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயமில்லை.

ஆனால், தமிழகம் பெரியார் மண் என சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும். பெரியாரின் பேரன் என சொல்லிக்கொள்ளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும் செண்டிமெண்டும் நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது? என்று தெரியவில்லை.

இந்த செண்டுடிமெண்ட் விவகாரத்தை அறிந்துள்ள, திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசை சேர்ந்த பீட்டர் அவ்ஃபோன்ஸ், கோபண்ணா போன்றோர் இதனை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வார்களா?இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்யம்மூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவிற்கு கூட இந்திராகாந்தி சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும், அமைச்சர் சாமிநாதனும், செல்வப்பெருந்தகையும் சிலை அமையும் அண்ணா சாலை ஸ்பென்சர் பகுதியை பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராணி வேலுநாச்சியார் உள்ளிட்டோருக்கு சிலை..தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - TN Assembly 2024

ABOUT THE AUTHOR

...view details