"முதலமைச்சர் கொடைக்கானல் பயணம் குறித்து திமுகவினரே விமர்சனம்" - ஹெச்.ராஜா தகவல்! சேலம்: சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு ஹெச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னுடைய நண்பர். திமுகவில் நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளனர். நாங்கள் இரவு பகல் பாராமல் பெட்டியைப் பாதுகாக்கிறோம். ஆனால் இவர் குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் செல்கிறார் எனத் திமுகவினரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் செயல்பாட்டைக் கண்டிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினால் தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து போதை மாநிலமாக மாறி உள்ளது.
ரூபாய் 2000 கோடி சம்பாதித்த போதைப் பொருள் குற்றவாளியைக் கண்டிக்கவில்லை. நடவடிக்கை கூட நீங்கள் எடுக்கவில்லை. போதைப் பொருள் காடாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் என்று தெரிகிறது.
எப்போது பார்த்தாலும் திமுக அரசிற்கு என்ன இல்லையோ அதைப் பற்றிப் பேசுவது தான் இவர்களுக்கு பழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது குடிநீர்த் தொட்டியில் சாணி கரைத்துள்ளனர். சமூகநீதி ஆட்சியில் சமூக அநீதி ஏற்பட்டது. மலம் கலந்த விவகாரத்தில் இவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சமூக நீதியின் மேல் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லாதவர் முதலமைச்சர் ஸ்டாலின். முதலில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும். வெட்கமில்லாத அரசாங்கமாகச் செயல்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் போதைப் பொருளில் வந்த பணத்தை வைத்து மங்கை என்ற படத்தை எடுத்து வருகின்றனர். அந்த மங்கை படம் யாருடைய தொடர்பு உள்ளது என்று நீங்கள் மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"ஸ்ட்ராங் ரூம் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும்" - தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தல்! - Strong Room Camera Issue