சென்னை: சென்னை, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (24). தனியார் சட்ட கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும், பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் தாம்பரம் அருகே இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணின் தனிப்பட்ட வீடியோவை காண்பித்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம், நகை பறிப்பு
இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, தமிழரசன் தாம்பரம் அருகே உள்ள காரமராஜபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த ஆறு ஆண்டு காலம் காதலித்து வந்துள்ளார். மேலும், தமிழரசன் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன், தனது பெற்றோர்கள் உதவியுடன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக தமிழரசன் ரூ. 30 லட்சம், 15 சவரன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழரசன் வைத்திருந்த லேப்டாப்பை அப்பெண் சோதனை செய்த போது இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தமிழரசனிடம் அப்பெண் கேட்ட போது, தமிழரசன் அப்பெண்ணையும் தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்து வைத்ததாக மிரட்டியுள்ளார். மேலும் அப்பெண்ணை பயமுறுத்தி மீண்டும் பணத்தை பறித்துள்ளார்.