தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது! - Dharmapuram Adheenam issue

Dharmapuram Adheenam: தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து கைது செய்துள்ள தனிப்படை போலீசார், இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.‌

Dharmapuram Adheenam issue
Dharmapuram Adheenam issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 12:57 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் மீது அவதூறு பரப்பும் வகையில், ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகக் கூறி, சிலர் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி கடந்த பிப்.25ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரையும் பிப்.28ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், திருக்கடையூர் விஜயகுமாருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் ஆதீனமடத்திற்கு உதவி செய்ததாகவும், தவறுதலாக அவர் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் வழக்கில் இருந்து திருக்கடையூர் விஜயகுமாரை நீக்க வேண்டும் எனவும் விருத்தகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மற்ற நபர்களை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார், மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலுபாக் நகரில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை அங்குள்ள அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். மேலும், இன்று மதிய வேளையில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.‌ இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'சிஏஏ சட்டம் வேண்டாம்' கோவையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details