திருநெல்வேலி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன்படி, பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், பாஜக கூட்டணி 300க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மேலும், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தமிழ்நாடு தேர்தல் களம்: தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக பல்வேறு இடங்களில் மூன்றாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, பல தொகுதிகளில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக சுமார் பத்து தொகுதிகளில் பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் அதிர்ச்சியாக நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி டெபாசிட் இழந்துள்ள சம்பவம் அக்கட்சி நிர்வாகிகள் இடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையிலிருந்தார்.
தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை வகித்தார். அதேநேரம், நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வந்தார். இருப்பினும், கடைசிவரை அவரால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற முடியவில்லை. நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டெபாசிட் இழந்த அதிமுக: அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆரம்பத்திலிருந்தே நாம் தமிழர் வேட்பாளர் சத்யாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று வந்தார். குறிப்பாக, மொத்தம் 24 சுற்றுகள் இருந்த நிலையில், 16 சுற்றுகள் வரை நாம் தமிழர் வேட்பாளர் தான் மூன்றாவது இடத்திலிருந்து வந்தார். அதிமுக நான்காவது இடத்தைப் பிடித்தது.
பின்னர், ஒரு வழியாக 17வது சுற்றுக்குப் பிறகு அதிமுக, நாம் தமிழர் வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்றது. இறுதியாக 24 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அதிமுக 89,601 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி சத்யா 87,686 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இரண்டு பேருமே தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுகவின் வேட்பாளர் ஜான்சி ராணி டெபாசிட் இழந்துள்ளார். மேலும், இதுவரை நடைபெற்ற தேர்தல் வரலாற்றில் நெல்லை தொகுதியில் முதல் முறையாக அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.