மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திட்டம் ரத்து செய்யப்பட்டதிற்காக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பாஜக கொண்டு வராத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு. மேலூர் மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தையும் ரத்து செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை.
அண்ணா பல்கலை., விவகாரத்தில் ஆதாரம் உள்ளது:ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை நான் ஒரு நாள் வெளியிட போகிறேன். வழக்கின் போக்கை தெரிந்து கொண்டு ஆதாரங்களை வெளியிடுவேன். ஞானசேகரன் செய்த குற்ற செயலுக்கு பின் யார் யாரிடம் பேசினார் என என்னிடம் ஆதாரம் உள்ளது. FIR-ஐ லீக் செய்தது யார் என யாரும் விசாரிக்கவில்லை? செய்தியாளர்கள் செல்போனை பறிமுதல் செய்தது தவறான செயல்.
“ஆதாரத்தை வெளியிடுவேன்”:சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரிக்கவில்லை என்றால் ஞானசேகரனின் செல்போன் தகவல்களை வெளியீடுவேன். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் பாஜக சட்ட உதவிகளை செய்யும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு திசை திருப்பி கொண்டு செல்லப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாத முதலமைச்சர் அரிட்டாப்பட்டிக்கு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை புரிந்து கொண்டேன்.