சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்தியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கடந்த ஜூன் 23ஆம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்திற்கு நான்தான் காரணம் என்றும், இதில் எனக்கு கூட்டுச் சதி இருப்பதாகவும் பேசி இருந்தார். அவர் சொன்னது எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு கொடுத்ததில்லை.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்று விட்டது. 60 ஆண்டுகால அரசியலைப் பார்த்த ஆர்.எஸ்.பாரதி திமுகவின் காலம் முடிந்து விட்டது என்பது தெரிந்துகொண்ட பிறகுதான் இப்படிபட்ட அவதூறு பேச்சுக்கள் அவர் வாயில் வருகிறது. நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளோம். ஒரு கோடி ரூபாயையும் ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெற்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சியிலேயே ஒரு மறுவாழ்வு முகாம் அமைப்போம்.
இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.பாரதியை நிச்சயம் சிறைக்கு அனுப்புவோம். பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்பியுள்ளேன். அண்ணாமலை சின்ன பையன் என்று எல்லாம் ஆர்.எஸ்.பாரதி பேசினார். இதே சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்கிறான் என்று பாருங்கள்" என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணையை சிபிஐக்கு மாற்ற முதலமைச்சர் முட்டுக்கட்டை போடும் மர்மம் என்ன எனவும், லண்டன் செல்வது பற்றிய கேள்விக்கு, போகும் போது நிச்சயம் சொல்கிறேன் என கூறியுள்ளார். மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைவரும் வாக்களியுங்கள், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்" என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "செல்வப்பெருந்தகை நீதிமன்றம் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். இது போன்ற மனிதர்களை மக்களிடம் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். நான் சண்டை போட்டால்தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால், அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். என்ன வந்தாலும் சந்திக்க தயார்" என்றார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் ஆராய்ச்சி மாணவருக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - life imprisonment to PhD student