மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடும் மாடுபிடி வீரர்கள் காயம் அடைய நேர்ந்தால் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது.
மதுரையில் நாளை (ஜன.14) துவங்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடும் மாடுபிடி வீரர்கள் காயம் அடைய நேர்ந்தால் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 14 முதல் 16 வரை மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளன. தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: மழலைகளின் பாரம்பரிய சிலம்பம் பொங்கல் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்..
நாளை அவனியாபுரத்திலும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 15 பாலமேடு, ஜனவரி 16 அலங்காநல்லூர் என அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் யாரேனும் காயமடைய நேர்ந்தால் அவர்களுக்கு அளிக்கக்கூடிய முதல் உதவி சிகிச்சை மற்றும் காயப்பட்டவர்களை எப்படி கையாளுவது என்பது குறித்து செஞ்சிலுவைச் சங்க அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பயிற்சி மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் செஞ்சிலுவை சங்கத்தினரின் பங்கு இன்றியமையாததாகும். மாடுபிடி வீரர்களுக்கு உணவு வழங்குவது, குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைய நேரிடும் நபர்களை எவ்வாறு கையாள்வது? அவர்களை முதலுதவி சிகிச்சைக்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என்பது குறித்து இன்று செயல்முறையாக செய்து காண்பித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.