சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அண்ணாமலை, "தேர்தல் களத்தில் இருக்கிறோம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம். பல அரசியல் கட்சிகளின் உண்மை முகம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் திமுகவிற்கு பிரசாரம் செய்கிறேன் என இணைந்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கமல்ஹாசன் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
நான் அப்படி பயன்படுத்தப் போவதில்லை. தமிழ்நாட்டில் 2 திராவிட கட்சிகளுக்கும் எதிராக அரசியல் செய்வது எவ்வளவு கடினம் என்பதை கமல்ஹாசன், திமுகவுடன் இணைந்திருப்பது எடுத்துக்காட்டாக உள்ளது. கமலஹாசன் யாரை எதிர்த்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்தாரோ? இன்று அவர்கள் ஓட்டுப் போட்டு ராஜ்யசபாவிற்கு செல்ல வேண்டியிருக்கிறது.
அனைத்தையும் இணைக்கும் ஒரு நல்ல புள்ளியாக பாஜக இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் என மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ? அவர்கள் பாஜகவின் பக்கம் வரவேண்டும். ஒரு மாற்றத்தை உறுதியாக நாம் செய்து காட்டுவோம்.
போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. அதுகுறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2019-ல் இருந்து போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் படம் எடுத்தது, ஹோட்டல் வாங்கியது, அரசியல் சார்ந்த புள்ளிகளுக்கு இருக்கும் தொடர்பு என விசாரணை நடைபெறுகிறது.
பாஜகவைச் சேர்ந்தவர்கள் சாலையில் நடந்து சென்று கீழே தவறி விழுந்தால் கூட, பாஜக என வெளிப்படையாகக் கூறும் செய்தியாளர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவரை திரைப்பட தயாரிப்பாளர் எனப் போடுகிறார்கள். அவர் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் என்று யாரும் பதிவிடுவதில்லை. அவர் திமுக அயலக அணியின் முக்கிய நபர் என்பதை யாரும் மறைக்க வேண்டியதில்லை.
ஜாபர் சாதிக் வழக்கு:அதை வைத்து இவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். இதை தமிழக மக்கள் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு ஜாபர் சாதிக்கை பிடித்தால் போதாது. அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும்.
அரசு மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகள் மது ஆலைகளை நடத்திவிட்டு, ஒரு ஜாபர் சாதிக்கை பிடித்து விட்டால் போதை ஒழிந்து விடும் எனக் கூறுவது சரியாக இருக்காது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், என்சிபி அதிகாரிகள் பாரபட்சம் இன்றி அவர்களை விசாரணை ஆணையத்திற்குள் கொண்டுவர வேண்டும். அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'பாஜக கூட்டணி குறித்த முடிவுகள் மற்ற மாநிலங்களில் இப்பொழுதுதான் வந்து கொண்டிருக்கிறது. முதல் பட்டியல் என்பது பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும், கூட்டணி பெரிதாக தேவைப்படாத மாநிலங்களிலும் வெளியிடப்பட்டு விட்டது. அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாட்டில் பட்டியல் வெளியிடும் பட்சத்தில் செய்தியாளர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிப்பேன்.
தேர்தல் அதிகாரிகளைப் பொறுத்தவரையில், பதவி விலகுவது சாதாரணமான ஒரு விஷயம்தான். ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக, ஏன் ராஜினாமா செய்தேன் என்பதைக் கூற வேண்டும். தேர்தல் குறித்து அடுத்த மூன்று நாட்களில் முடிவுகள் வரலாம். குறிப்பாக, பாஜக கூட்டணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிடுகிறார், ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், சரத்குமார் போன்ற முக்கியமான தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் ஆளுமைகள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.கே.வாசன் நம்முடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
இந்த முறை பாஜகவின் தேர்தல் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பகுதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியாக அணுகி கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பார்ப்பீர்கள் நிறைய கட்சிகள் எனக் கூறுவதைவிட, யாரெல்லாம் மோடியின் சித்தாந்தத்தை விரும்புகிறார்களோ.. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை புரிதல் ஆகியவை குறித்த தெளிவு உடையவர்களே, நம்முடன் இருப்பார்கள்.
முதலில் என் மீது கை வைக்கட்டும் பார்க்கலாம்; அண்ணாமலை காட்டம்:அமைச்சர் அன்பரசன் பேசியவை குறித்துக் கேட்டபோது, முதலில் எங்கள் மாவட்டத் தலைவரை சந்தித்துவிட்டு அதன் பிறகு என்னைச் சந்தித்து விட்டு, என்னையும் தாண்டி பிரதமர் மேல் கை வைக்க வேண்டும் என மாவட்டத் தலைவர் சவால் விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு அவர் மீது கை வைக்கட்டும், அதன் பிறகு நான் பேசுகிறேன்.
எப்பொழுதுமே இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் திமுக மரியாதை கொடுக்காது. தேர்தல் சமயங்களில் பகடை காய்களாகப் பயன்படுத்துவது மட்டும்தான், திமுகவின் நோக்கம். நான் நேரடியாகவே கேட்கிறேன், திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் என்ன செய்தார்கள். மத்திய அரசு சார்பாக கல்வி உதவித்தொகை புனித யாத்திரைக்கான தொகை என நிறைய உதவிகளை எங்களால் கூற முடியும். திமுகவால் கூற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "போதைப்பொருளில் இருந்து இளைஞர்கள் விலகி இருங்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!