கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சியின் செயலாக்கத்தை, அக்கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளராக பங்கு கொள்வதற்காக கோவைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மத்திய அரசு, சுதந்திரமாக இயங்கும் சிஏஜி அமைப்பு ஆய்வு செய்து, நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தணிக்கை செய்வார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சிஏஜி அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அமைச்சர் துரைமுருகன் அரசு மதுபானத்தில் கிக் இல்லை என்று சொன்னதை நகைச்சுவையாக சொன்னாலும், நான் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, டாஸ்மாக் தரம் குறைவாக உள்ளது, தண்ணீரைப் போல உள்ளது என்று பலர் கூறினர். டாஸ்மாக் போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கிச் செல்வதாக கூறினார்கள்.
டாஸ்மாக் மதுவின் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், அது உண்மை. ஒரு மூத்த அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வேலை செய்யவில்லை, அரசு தவறாக வேலை செய்கிறது.