ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மாயாறும், பவானி ஆறும் கூடும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது, பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அதில் சேறும் சகதியும் 15 அடி போக, மீதம் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. தற்போது மழை காரணமாக அணையின் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது.
பவானிசாகர் அணை வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) அதாவது, வட கேரளாவில் உள்ள தென்மேற்கு மலைப்பகுதியில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கூடலூர், பந்தலூர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. மேலும், இந்த மழை நீரானது மாயாற்றில் கலப்பதன் காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோன்று, பில்லூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பில்லூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரும் பவானி ஆற்றில் கலக்கிறது. தற்போது மாயாறும் பவானி ஆற்றின் உபரி நீரும் பவானிசாகர் அணைக்கு வந்து சேர்வதால், அணையின் நீர்வரத்து 1,482 கன அடியிலிருந்து, 4,369 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணை நீர்மட்டம் 65.48 அடியாக உயர்ந்து, நீர் இருப்பு 9.16 டிஎம்சி ஆக உள்ளது.
இந்த நிலையில், அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, கடந்த 4 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை; வீடுகளுக்குள் மழைநீர்.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!