தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர் மனுத்தாக்கல்.. முற்றும் உட்கட்சி பூசல்! - Internal conflict in Congress party - INTERNAL CONFLICT IN CONGRESS PARTY

Internal conflict in Congress party: காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நெல்லையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமான நிலையில், கடைசி நாளான இன்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரைத் தவிர மற்றொருவர் போட்டி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

உட்கட்சி பூசல் காரணமாக நெல்லையில் குழப்பம்
காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிடுவேன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 7:26 PM IST

திருநெல்வேலி:இந்தியா முழுவதும் வரும் ஏப்.19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றே வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், திமுக சார்பில் நெல்லை தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ்சில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, நெல்லையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர் போன்ஸ், ராமசுப்பு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட பல முக்கிய விஐபிகள் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டனர்.

இதனால் நேற்று வரை நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து, கடைசியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர் ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவும், போட்டி வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்காக வந்திருந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சியில் கடும் கோஷ்டி பூசல் நிலவிவந்ததால் தான், வேட்பாளர் அறிவிப்பில் தாமதமானது. இந்த நிலையில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில், ராமசுப்பு போட்டி வேட்பாளராக களம் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வேட்புமனுத் தாக்கல் செய்து வந்த ராமசுப்புவிடம் கேட்டபோது, “நான் சுயேட்சையாக போட்டியிடவில்லை, நான் ஒரு காங்கிரஸ்காரன், எனவே காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிடுவேன்” என ஆவேசமுடன் கூறினார்.

அதேபோல், நாங்குநேரியைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி வாணுமாமலை என்பவரும், காங்கிரஸ் சார்பில் போட்டி வேட்பாளராக போட்டியிடப் போவதாக தெரிவித்த நிலையில், வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிந்ததால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளராக இருந்தால், ஒரு கட்சி சார்பில் ஒரே ஒரு நபர் மட்டுமே போட்டியிட முடியும். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரைத் தவிர இரண்டு பேர் போட்டி வேட்பாளராக போட்டியிடப் போவதாக கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் போட்டி வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்படுமா இல்லையா என்பது நாளை தெரியவரும்.

இதையும் படிங்க: "தேர்தலில் வாக்கு கேட்க எங்கள் சின்னத்தை தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" - சீமான் பேச்சு - NTK Mic Symbol Intro

ABOUT THE AUTHOR

...view details