பெங்களூரு:தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினுக்கு வடமாநிலங்களில் பலர் கண்டனங்கள் எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.4) விசாராணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் ஆஜராகி கோரி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பத்திரிகையாளர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மெலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பின்விளைவு தெரியாமல் பேசினீர்களா? - சனாதன தர்மத்தை விமர்சித்த உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!