சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறிய பாலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம், 30ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்து சங்ககிரி போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்ட நிலையில் பெண் சடலம் அழுகி நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர். இது தொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதி அபினேஷ்சாகு (வயது 40), அஸ்வின்பாட்டில் (37) ஆகியோரை சங்ககிரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் கூறுகையில்,“வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய கார்களின் பதிவெண்கள், அப்பகுதியில் உள்ள மொபைல் போன் கோபுரத்தில் பதிவான எண்கள், சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர் அச்சிட்ட பிளாஸ்டிக் பையை வைத்து விசாரணை நடத்தினோம்.
114 கார்கள், அந்த சாலையில் குறிப்பிட்ட இரு நாட்களில் வந்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அங்கு பயன்படுத்திய மொபைல் எண்கள் குறித்தும் விசாரித்தோம். அனைவரும் வந்து சென்ற காரணத்தை சரியாக கூறினர். ஆனால், கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட எக்ஸ்.யு.வி 300 மாடல் காரை ஓட்டி வந்த அபினேஷ்சாகு, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின் அவரது மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.