மதுரை:சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தோட்டக்கலை செயல்பாடுகள் வனத்துறை அல்லாத செயல்பாடு என்பதும், அது வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
மாஞ்சோலை பகுதி, முண்டந்துறை புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
மாஞ்சோலை விவகாரத்தில், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போது அதன் பணியாளர்களுக்கான பணப்பலன்களை வழங்குவது தொடர்பான பிரச்னை புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:10 ஆண்டுகள்.. 140 வாய்தாக்கள்.. அவமதிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சமூக ஆர்வலர்..!
காடும், புலிகள் சரணாலயப் பகுதியும் வனம் சாரா நடவடிக்கைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மனிதர்களின் வாழ்விடமாக ஆக்கப்பட்டுவிடுமோ என அச்சம் எழுகிறது. ஆகவே, நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக கள அளவில், வட்ட அளவில், வனத்துறையின் தலைமை அலுவலக அளவில், சட்டத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து முழுப் பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஞ்சோலை தொடர்பான வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்