சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த தண்டனையை கடந்த மாதம் 12ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனை அடுத்து, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை அடுத்து உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், பீலா வெங்கடேசன், ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பீலா ராஜேஷ் என்றிருந்த தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் வசித்து வரும் நிலையில், கடந்த 21 ஆம் தேதி ராஜேஷ் தாஸ் அவரின் நண்பர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.