கோயம்புத்தூர்:நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோயம்புத்தூர் பந்தைய சாலை, ரெட்ஃபீல்டு பகுதியில் ராணுவ வீரர்களின் பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.
பேரணியில் 80-க்கும் மேற்பட்ட வீரர்கள், இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடி ஏந்தியவாறு, ராணுவத்தின் வளாகத்தில் இருந்து ரெட் பீல்ட்ஸ் சாலை, பந்தைய சாலை, வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். பேரணியில் இருசக்கர வாகனங்களை பின்தொடர்ந்த ராணுவ வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தி தேசப்பற்று பாடல்களை பாடியபடி சென்றனர். இதனை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கண்டு ரசித்தனர்.
ட்ரோன் மூலம் பறந்த கொடி:கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் அரசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கல்லூரி வளாகம் முழுவதும் ட்ரோனில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, தேசிய கொடி ஏந்தி சுதந்திர தின வாழ்த்துகள் கூறியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.