தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேல்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பாக சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ஆலமரம் சாய்ந்து விழுந்தது.
ஆலமரம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அப்பகுதியில் உள்ள 5 வீடுகள் சேதமடைந்தன. மேலும், மூன்று மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆலமரம் விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தபோது அப்பகுதியில் அமைந்துள்ள தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல, முத்தையா கோயிலுக்குச் செல்லும் சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மாரில் சேதம் ஏற்பட்டு சாய்ந்ததில், அந்த சாலையில் இருந்த 8 மின் கம்பங்களும் சாய்ந்தன. அந்த சமயத்தில் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எதுவும் செல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் நேற்று மாலை முதல் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகம், மழையில் சாய்ந்த ஆலமரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி கும்பக்கரை அருவியில் சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!