ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனம் ஆளும் தேவதையாக பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது, பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டும் குண்டம் திருவிழா மார்ச் 11ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் கோலாகலமாகத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த ஒரு வாரமாக பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்று, செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் சப்பரம் கோயிலைச் சென்றடைந்தது.
அதையடுத்து, புதன்கிழமை காலை பண்ணாரி அம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி, கோயில் துணை ஆணையர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு வட்ட வடிவில் 3 அடி ஆழக்குழி ஒன்று வெட்டப்பட்டது.
அதில், பாரம்பரிய முறைப்படி குச்சி மற்றும் விறகுகள் போட்டு தீயிட்டு, பின்னர் பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, மலைவாழ் மக்களின் பீனாச்சி வாத்தியம் முழங்க கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் குழியில் எரியும் நிலக்கம்பத்தைச் சுற்றி கம்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.