சென்னை:வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள் 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது கணவர் நாடு திரும்ப முடியாமல் சென்னை விமான நிலையத்தில் 2 நாட்களாக தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் ஈடிவி பாரத்திற்கு வழங்கிய தகவலின்படி, வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் (73). இவரது மனைவி புரோவா ராணி (61). புரோவா ராணி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வங்கதேசம் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சுசில் ரஞ்சன், தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக, தமிழ்நாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இதில், மனைவிக்கு முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளார்.
அதன்படி, நேற்று வங்கதேசம் செல்வதற்காக மனைவியுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நேற்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து டாக்கா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.