தாயை இழந்த குட்டி யானை வனப்பகுதியிலிருந்து தப்பியோட்டம் ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப் பகுதியில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தற்போது, கோடை வெயில் காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி வனத்தை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் யானை நேற்றைய முன்தினம் உயிரிழந்தது. இந்த யானைக்கு 3 வயதான ஆண் யானை மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன பெண் யானை என இரண்டு குட்டிகள் இருந்தன.
தாய் யானை இறந்ததால், 3 வயதான ஆண் யானை குட்டி தனது யானை கூட்டத்தோடு சேர்க்கப்பட்டது. ஆனால், பிறந்து சில மாதங்களே ஆன பெண் குட்டி யானையும் தனது யானைக் கூட்டத்தோடு சேர்க்க தீவிரமாக முயற்சித்தனர்.
அதன்படி, குட்டி யானை வனப்பகுதியில் விடப்பட்டது. குட்டி யானையைப் பார்த்ததும், அதன் யானைக் கூட்டத்திலிருந்து ஓடி வந்த பெண் யானை, குட்டி யானையை அரவணைத்துக் கொண்டு, தனது கூட்டத்துடன் சென்றது. இதனால், வனத்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் விடப்பட்டிருந்த குட்டி யானை, இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் கிராமத்தில் புகுந்து, அப்பகுதியில் உள்ள சாலையில் நடமாடியுள்ளது. குட்டி யானை கிராமப்பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இது குறித்த தகவலை ஆசனூர் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தாயைப் பிரிந்து வாடும் குட்டி யானையை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் வைத்து பாரமரித்து வருகின்றனர்.
இது குறித்து ஆசனூர் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குனர் சுதாகர் கூறுகையில், “பண்ணாரியில் தாயை இழந்த இந்த குட்டி யானையை, அதே கூட்டத்தின் மற்ற யானைகளோடு சேர்த்தோம். வெற்றிகரமாக 3 முறை அதனுடன் சேர்த்தோம். ஆனால், குட்டியானை அந்த கூட்டத்தை விட்டு வெளியேறிவிடுகிறது. இதையடுத்து, ஆசனூரில் உள்ள மற்றொரு கூட்டத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். குட்டி யானையின் நிலை குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் நாளை பந்த்..! சிறுமி கொலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா