தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் கடந்த 7ஆம் தேதி மினி பஸ் ஓட்டுநர் சிவமணிகண்டன் (22) நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அய்யம்பேட்டை காவல்துறையினர் சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
கொலை நடப்பதற்கு முதல் நாள் மினி பஸ் ஓட்டுனருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருக்கும் இடையே பெட்ரோல் பங்கில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக சிவமணிகண்டன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் தொடர்பாக அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிமதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், இதனால் தான் மறுநாள் சிவமணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடத்திய விசாரணையில், "தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கடந்த 7ஆம் தேதி தஞ்சை கும்பகோணம் மெயின் ரோட்டில் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மினி பஸ்சை நோக்கி சிவமணிகண்டன் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அய்யம்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கரண் (25), கதிர்வேல் (23), ஹேமதீபன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையிலும், 17 வயதுடைய சிறுவன் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் 3 பேர் இதில் தொடர்பு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கொலை தொடர்பாக சுந்தரேசன் (20) பரமேஸ்வரன் (20) ராகுல் (19) ஆகிய 3 பேரும் நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.