சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்றிரவு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதையடுத்து செம்பியம் காவல்துறை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேரை கைது தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடைபெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர்களிடம் நடத்தப்பட்ட போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யத் திட்டம் தீட்டி ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ஆட்டோ ஓட்டுநர் திருமலை என்பது தெரிய வந்துள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், திருமலை ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே உள்ள பள்ளி அருகில் தான் எப்போதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து வந்துள்ளார். இந்த சூழலில், சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டை பார்க்க வந்தபோது அவருடன் குறைந்த அளவிலான ஆட்கள் இருப்பதை பார்ப்பதை திருமலை இது குறித்து ஆற்காடு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துள்ளது. மேலும் கடந்த 24 வருடங்களாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆற்காடு சுரேஷ் இடையே முன்னுவிரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வட சென்னையில் இருந்த பிரபல ரவுடி நாயுடுவின் வலது கரமாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் தென்னரசு ஆகியோர் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ரவுடி நாயுடுவை பூந்தமல்லியில் வைத்து ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்துள்ளார். அதற்காகவே தொடர்ந்து ஆற்காடு சுரேஷை கொலை செய்ய ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கூட்டாளியான தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கும்பல் கொலை செய்துள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஆனால், இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் அடிபட்டாலும் அவரின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
மேலும், ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஒற்றைக்கண் ஜெயபாலன் ஆகியோர் ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலுவையும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு ஆற்காடு பாலு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பிபிஜி சங்கர் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை.. இரண்டாண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய அரசியல் கொலைகள்!