சென்னை: ஆட்டோவில் பயணித்த மூதாட்டி தவறவிட்ட தங்க நகையை ஆட்டோ ஓட்டுநர் அடகு வைத்து பணமாக்கிய சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், “சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மார்கிரேட் (64) என்ற மூதாட்டி. இவரும், அவரது உறவினரும் கடந்த மே 5ஆம் தேதி அன்று சோழிங்கநல்லூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பாரிமுனையில் இருந்து அரசுப் பேருந்தில் வந்த இருவரும், சோழிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், மூதாட்டி தான் கொண்டு வந்த பையை மறந்து ஆட்டோவில் விட்டுச் சென்றுள்ளார். அதில், அவர் தனது மகளிடம் கொடுப்பதற்காக 12 சவரன் தங்க நகையைக் கொண்டு வந்துள்ளார். மகளின் வீட்டிற்குச் சென்று மூதாட்டி பார்க்கையில் பையைக் காணவில்லை. தங்க நகை உள்ள பையை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டதை அறிந்த பாட்டி ஆட்டோ குறித்த விபரம் தெரியாததால், இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரபுவிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் பிரபு தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜு, தலைமைக் காவலர் யாசர் அரபாத், முதல்நிலை காவலர் நித்தியானந்தம், இரண்டாம் நிலை காவலர் ரவி உள்ளிட்டோர் அடங்கிய ஒரு தனிப்படை அமைத்து, ஆட்டோ யாருடையது? ஓட்டுநர் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு ஆட்டோ மட்டும் அதிவேகமாக சென்றதால், அதன் பதிவு எண் கிடைப்பது சவாலாகவே இருந்துள்ளது.