திருப்பத்தூரில் ஓட்டலில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை நடத்த வருகை தரும் நிலையில், அண்ணாமலையை வரவேற்க வேலூர் மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
அதன்படி ஆம்பூர், மாதனூர் தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர் வைக்க இடங்களை ஆய்வு செய்த பின்னர் குளிதிகை பகுதியில் உள்ள சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் தாபாவில், பாஜகவினர் நிர்வாகிகளுடன் உணவு அருந்த சென்றுள்ளனர்.
அப்போது பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் சிலர் திடீரென தாபாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டுள்ளனர். அப்போது பாஜகவினருக்கும், தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்தவர்களுக்கும், இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சண்டையில் பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை உடனடியாக பாஜகவினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமாரை தாக்கியவரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் பட்டியல் சமூக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!