சென்னை: சென்னை மாநகராட்சியில் கல்வித் துறை இணை ஆணையரைக் கண்டித்து சென்னை பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். தற்போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி கண்டறிந்து ஒவ்வொரு ஆசிரியரும் எந்த பள்ளியில் பணிபுரிகின்றனர் என்ற அடிப்படையில், அவர் பணி புரியும் பள்ளியில் உதவி கல்வி அலுவலர் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் நடத்தவில்லை, வகுப்பு எடுக்கவில்லை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியைச் சரிவரச் செய்யவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இதன் மீது திடீரென விளக்கம் கேட்டு கடிதம் அளித்துள்ளனர். இதனால், சென்னை பள்ளிகளில் பணியாற்றி வரும் 21 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காரணம் கூறி, விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் ஆசிரியருக்கு அனுப்பி உள்ள விளக்கக் கடிதத்தில், "பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மணலி தொடக்கப்பள்ளியில் உதவி கல்வி அலுவலர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பணிகளின் குறைபாடுகளுக்கு, இடைநிலை ஆசிரியர், சென்னை தொடக்கப்பள்ளி, மணலி காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்குதல் தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தொடக்கப்பள்ளி, மணலி பள்ளியை உதவி கல்வி அலுவலர் செப்டம்பர் 9ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்ட போது கீழ்க்கண்ட குறைகள் கண்டறியப்பட்டுள்ளது.
- வகுப்பில் உள்ள மாணவர்களின் நோட்டு புத்தகங்களை வருடத் தொடக்கத்திலிருந்து இன்று வரை திருத்தவில்லை
- மனப்பாட செய்யுள்களை மாணவர்கள் கூறவில்லை
- ஆசிரியர் வகுப்பிற்குச் சரியாக வருவதில்லை என்று மாணவர்கள் குற்றச்சாட்டு
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை
- மாணவர்களின் வகுப்பு நோட்டில் பாடங்கள் எதுவும் எழுதப்பட்டு வகுப்பாசிரியர் கையொப்பம் இடப்படவில்லை