சென்னை: சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் ஒன்றைப் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறைக்கு சவால் விடும் வகையில், "சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை தானும் பாடுகிறேன்.. முடிந்தால் கைது செய்து பாருங்கள்" என ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாடிய சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சீமான் மீது பல காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, சீமானுக்கு எதிராக சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர், கடந்த ஜூலை 16ஆம் தேதி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், "மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து பாடிய பாடலில் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், கருணாநிதியை இழிவுபடுத்தி நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும், பேசியும் இருக்கிறார் நாதக சீமான். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.