சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மாலை, சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் 5 நாட்களுக்கு காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்படுபவர்களில் ஒருவராகக் கருதப்படும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பிரமுகரும், வழக்கறிஞருமான அருளை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி அபிராமி தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி புகார் மனு அளித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தனது கணவர் அருளை மேலும் 5 நாட்களுக்கு போலீசார் காவலில் எடுக்க இருப்பதாக கூறுவதாகவும், ஆனால் ஏற்கனவே 5 நாட்களுக்கு காவல் எடுத்தபோது அவர் அனைத்து உண்மைகளும் கூறிவிட்டார் எனத் தெரிவித்தார். இந்நிலையில், போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அழைத்துச் சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.