கரூர்:திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அந்தி பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி தாஸ் என்பவரின் மகன் பிச்சைமுத்து பாஸ்கர் (வயது 33). மீரட் ராணுவ மருத்துவ முகாமில், 13 ஆண்டுகளாக அவசர ஊர்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். திருமணமான அவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்புவதற்காக சண்டிகர் - மதுரை விரைவு ரயிலில் கடந்த மார்ச் 12ஆம் தேதி மீரட் ரயில் நிலையத்தில் ஏறிய அவர் நேற்று காலை 11:45 மணியளவில் கரூர் வந்தடைந்தார். கரூர் ரயில் நிலையத்தை திண்டுக்கல் என நினைத்து கீழே உடமைகளுடன் கீழே இறங்கிய பிச்சைமுத்து பாஸ்கர், பின்னர் இது கரூர் என அறிந்த பிறகு மீண்டும் ஓடும் ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட ரயிலில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர். ஆனாலும் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கரூர் இருப்புப்பாதை போலீசார், ராணுவ வீரரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.