சென்னை:சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது குறித்த விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரித்து வருகிறது. மதியம் 12 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'ஆம்ஸ்ட்ராங் உடலை நாளை வரை பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்க முடியாது. எனவே, அரசு சொல்லும் இடத்தில் முதலில் அவரின் உடலை அடக்கம் செய்யுங்கள். பின்னர் மணிமண்டபம் கட்டிய பின் உடலை எடுத்து மீண்டும் அங்கு அடக்கம் செய்து கொள்ளுங்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் அவரது உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது. அதுபோல அடக்கம் செய்யலாம். அமைதியான முறையில் முதலில் இறுதி சடங்குகளை முடியுங்கள்' என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
அப்போது, 'ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் விவகாரத்தில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது' என்று மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி,' விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது?' என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் அனுமதி வழங்கினார்' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.