சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு ஆதரவு கொடுத்தது தான் காரணம் என சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலினும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக இன்று மூன்றாவது நாளாகக் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசினார். அப்போது, நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் நெஞ்சுரத்தோடு பேசி உள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த பிரச்னைக்கு காரணம் அ.தி.மு.க., தான். உங்களின் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவையில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சுரங்கம் ஏல நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற மசோதாவை ஆதரித்ததால் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.
திமுக எல்லா நிலைகளிலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து வருகிறது. அரசியல் ஆதாயம் தேட டங்ஸ்டன் விவகாரத்தில் அ.தி.மு.க., குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
இடையே பேசிய முதலமைச்சர், மாநிலங்களவையில் அன்றைய அ.தி.மு.க., உறுப்பினார் தம்பி துரை என்ன பேசினார் அதை வெளியிட தயாரா? அவர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியது உண்மையா? இல்லையா? அதை உங்களால் மறுத்து பேச முடியுமா?
ஆர்.பி.உதயகுமார்:
இதையடுத்து பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க முடியாத்தை, அ.தி.மு.க-வின் ஒரு உறுப்பினர் பேசி மசோதா நிறைவேறியதாக கூறிவதை ஏற்க முடியாது என்றார்
முதலமைச்சர்: நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள் என்பதை மறுக்க முடியாது. என்னிடம் உங்கள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆதரவு தெரிவித்தது தொடர்பான ஆதாரம் இருக்கிறது. நான் அதை வழங்குகிறேன். இல்லை என மறுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
அமைச்சர் தங்கம் தென்னரசு:
விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரிய போது அனுமதி அளித்து உள்ளோம். எனவே, இந்த அவையின் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்வேன் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்காது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.தி.மு.க-வினர் முகக்கவசம் அணிந்து வந்திருக்கின்றனர். ஆனால், அது அவர்கள் செய்தத் தவறை மறைக்கவே முகக்கவசத்தைப் போட்டு வந்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
டங்ஸ்டன் விவகாரம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்தின் இந்துஸ்தான் ஜிங்க் என்ற துணை நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான மத்திய அரசின் ஏல அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இதற்குப் பிறகு மத்திய அரசு, தமிழக அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
டங்ஸ்டன் விவகாரம் மதுரை மாவட்டத்தை உலுக்கி வரும் நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த பிரச்னை சூடுபிடித்துள்ளது. அதிமுக தான் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்திற்கு காரணம் என ஆளும் கட்சி கூறியதால், எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.