சென்னை: அரிட்டாபட்டி சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அந்த பகுதி விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தின் இன்று சந்தித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். டங்ஸ்டன் திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில் தீர்மானம்:தமிழ்நாடு சட்டப்பேரவையில் டிசம்பர் 9-ம் தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. அப்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன் என கூறினார்.
எனினும் கூட மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.