புதுடெல்லி:மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் மத்திய அமைச்சர் கிஷண்ரெட்டி உறுதி அளித்திருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்தின் இந்துஸ்தான் ஜிங்க் என்ற துணை நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான மத்திய அரசின் ஏல அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்நிலையில், மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இதற்குப் பிறகு மத்திய அரசு, தமிழ்நாடு அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை இன்று சந்தித்துப் பேசினர்.
இதையும் படிங்க:பேருந்துக்கு காத்திருந்த கிருஷ்ணகிரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெங்களூருவில் பயங்கரம்!
இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, "இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் சந்தித்துப் பேசினர். அவர்களுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், நமது பிரதமர் நரேந்திரமோடி எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார். மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண்ரெட்டி உறுதி அளித்துள்ளார்,"எனக் குறிப்பிட்டுள்ளார்.