சென்னை:தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தார். இதற்கிடையில், சமீபத்தில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது சத்ய பிரதா சாஹூவிற்கு, தமிழக கால்நடைத் துறைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்தது.
இத்தகைய சூழலில், தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ.12) பொறுப்பேற்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கான அறையில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அர்ச்சனா பட்நாயக் இன்றே அவரது பணிகளை தொடங்கினார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். அதற்கும் முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.