தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வெட்டுகளை எப்படி படியெடுக்கனும்? - தொல்லியல் ஆய்வாளர் கூறும் வழிமுறைகள்! - Sivaganga Inscription - SIVAGANGA INSCRIPTION

திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோயிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கல்வெட்டுகளை எவ்வாறு படியெடுப்பது என்பது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவுனர் புலவர் காளிராசா கற்றுக் கொடுத்தார்.

தொல்நடைக் குழு நிறுவுனர் புலவர் காளிராசா மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் காட்சி
தொல்நடைக் குழு நிறுவுனர் புலவர் காளிராசா மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 11:20 AM IST

Updated : Oct 4, 2024, 11:51 AM IST

சிவகங்கை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுப்படி எடுத்தல் மற்றும் கல்வெட்டு அமைப்பியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இக்கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நாள் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இதில், காலையில் அருள்மிகு ஆதி ரத்தினேசுவரர் திருக்கோயிலுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு சிற்பக் கலைத்திறன், கோயில் கட்டடக் கலை, கல்வெட்டுகள் ஆகியவை விளக்கப் பெற்றன. அதில் கல்வெட்டுகளின் அவசியம், அவற்றின் அமைப்பு, தொடக்கம், முடிவு, கல்வெட்டுகளின் இன்றியமையாமை, கல்வெட்டுகளைப் படியெடுக்கும் முறை, படிக்கும் முறை, பாதுகாக்கும் முறை ஆகியவை குறித்து புலவர் காளிராசா விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “பொதுவாக கல்வெட்டுகளைப் படியெடுக்கும் முறையை 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் நமது கோயில்களில் எழுதப்பட்டுள்ள வரலாற்றையும், அவை தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்வதற்காக கல்வெட்டு படியெடுத்துக் கொள்ளும் முறையை உருவாக்கினர்.

இதையும் படிங்க: "ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் திருவாடானை" - தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு!

இதன் வழி கல்வெட்டுகளை படியெடுத்து வந்து பொறுமையாக எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் முறையைக் கையாண்டனர். மேலும், கோயில் போன்ற இடங்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளை படியெடுத்துக் கொண்டு வருவதன் மூலம், அதன் நகலை எப்போதும் பயன்படுத்த முடிந்ததாக இம்முறை அமைந்தது.

கல்வெட்டு படியெடுக்கும் முறை: கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை நன்றாக தண்ணீர் வைத்து கழுவி துடைத்த பின்னர், அப்பகுதியில் படியெடுக்கப் பயன்படுத்தப்படும் வெள்ளை நிறத் தாளை வைத்து இதற்காக பயன்படுத்தப்படும் விலங்கு மயிர்களால் ஆன தேய்ப்பான்களைக் (பிரஸ்) கொண்டு ஓங்கி அடித்து, எழுத்துக்களின் இடுக்குகளில் தாள்கள் போய்ச் சேருமாறு செய்வதுடன், இதற்காக பயன்படுத்தப்படும் ஒருவகை மையினை விலங்குத் தோல்களாளான தேய்ப்பானைக் கொண்டு வெள்ளைத் தாளில் ஒத்தி எடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது அந்த மையானது எழுத்து உள்ள இடுக்குகளில் செல்லாமல், மேற்பகுதியில் மட்டும் ஒட்டி இருக்கும். அப்போது ஒவ்வொரு எழுத்துக்களும் தனித்தனியாகத் தெரியும். சிறிது நேரத்திற்குப் பிறகு காய விட்டு, அந்த தாளை மெதுவாக எடுத்து விடலாம். இவையே கல்வெட்டு படி எடுத்தல்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 4, 2024, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details