திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்ட தகவலில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் 2019-2020 மற்றும் 2020-2021 நிதியாண்டில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 14 ஆயிரத்து 281 முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் நகராட்சியில் நவம்பர் 2019 முதல் அக்டோபர் 2020 வரை ஜின்னா ஆணையராக இருந்தபோது தணிக்கை நடைபெற்றுள்ளது.
வருவாய் இழப்பீடு: அதில், ஆணையரின் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதில் மிகப்பெரிய அளவு வருவாய் இழப்பீடு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தணிக்கை செய்யப்பட்ட காலமான நவம்பர் 2019 முதல் அக்டோபர் 2020 வரை மாதந்தோறும் 660 லிட்டர் எரிபொருள் ஆணையர் வாகனத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் உள்ளது. ஒவ்வொரு மாதமும், அதிகபட்சம் 24 நாட்கள் தலைமை இடத்திலிருந்து பிற இடங்களுக்கு அலுவலக பணியாக சென்று வந்ததாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 மடங்கு கூடுதல் தொலைவு:குறிப்பாக, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம், தென்காசி ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அதேசமயம் அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி வரை பயணம் மேற்கொண்டு திரும்பினால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் மட்டுமே பதிவுகள் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 300 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மடங்கு கூடுதலாக தொலைவை அதிகரித்து காட்டியுள்ளனர். இதனால், நகராட்சி கூடுதல் செலவினம் மற்றும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு முகக்கவசம் ரூ.630: கரோனா வைரஸ் காலகட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவின் பேரில், அனைத்து பணியாளர்களுக்கும் முகக்கவசம் வழங்க ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த லிவ் பேக் என்னும் நிறுவனத்தில் இருந்து 100 முக கவசம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது அதிகமான விலைக்கு அதாவது, ஒரு முகக்கவசம் ரூ.630 கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 100 முக கவசங்கள் ரூ.63 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர்.
ஊழல் முறைகேடு: மேலும், கூடுதல் விலையில் சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதால் நகராட்சிக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 612 கூடுதல் செலவினம் ஆகிறது. பல்வேறு வகைகளில், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டில் ரூ.2,03,14,281 அளவில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
முறையான நடவடிக்கை: இந்த முறைகேடுகள் சம்மந்தமாக அப்போது ஆணையாளராக இருந்த வெ.ஜின்னா விசாரிக்கப்பட வேண்டும். சந்தை விலையை விட அதிக விலையில் கொள்முதல் செய்தது போன்ற காரணங்களுக்காக, நகராட்சி கணக்கு இருக்கை பணியாளர், மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். நகராட்சி இழந்த தொகை முறைகேடு செய்தவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, துறை செயலர் கார்த்திகேயன் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோருக்கு புகார் அளித்திருப்பதோடு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாக அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து! - ADSP VELLADURAI SUSPEND CANCELLED