விழுப்புரம்: "அமைச்சர் வரவேண்டும், கலெக்டர் வரவேண்டும்" சாலைமறியல் செய்தவாறு ஒரே குரலில் மக்கள் முழக்கமிடும் இந்த காட்சி விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஈடிவி பாரத் நிருபர் குழு பயணித்த போது பதிவான காட்சிகள்.
ஃபெஞ்சல் புயலால் மோசமான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அரகண்டநல்லூரும் அடங்கும். ஃபெஞ்சல் புயல் மற்றும் இதன் காரணமாக பெய்த கனமழை , வெள்ளப்பெருக்கு காரணமாக மிகமோசமான பாதிப்பை சந்தித்துள்ளது அரகண்டநல்லூர். தென்பெண்ணை ஆற்றில் இருந்து வந்த உபரி நீர் காரணமாக கோதை ஆறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 5 நாட்கள் கடந்தும் அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என கூறி சாலை மறியலில் குதித்தனர் இப்பகுதி மக்கள். இம்மக்களை திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் சந்தித்து சேதங்களை மதிப்பீடு செய்வதாக உறுதியளித்தனர்.
நமதுகுழு இந்த கிராமத்திற்குள் நுழைந்த போது, அஸ்திவாரம் வரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டதால் கட்டடங்கள் அந்தரத்தில் நிற்பது போன்று தோன்றின. வீடுகளில் துணி, அறைகலன்கள், சமையல் பாத்திரங்கள் வெயில் தேடி காய வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் இணைப்பு சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளின் உடல்களைக் கூட மீட்க முடியாமல் அப்படியே கிடந்தன.
தனக்கு வாழ்வாதாரமாக இருந்த கால்நடைகளை இழந்துள்ளதாகக் கூறுகிறார் கோவிந்தம்மா (ETV BHarat) அரகண்டநல்லூர் புதுநகரைச் சேர்ந்த கோவிந்தம்மா, 4 மாடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளார். "இந்த கால்நடைகளை நம்பி தான் எங்களின் வாழ்வாதாரம் இருந்தது. வெள்ளம் இந்த அளவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்த்து விடுவதற்காக நாங்கள் முயன்றோம். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. எங்களால் மாடுகளை மீட்க முடியவில்லை என்றார். இறந்து கிடக்கும் மாடுகளின் உடல்களைக் கூட எங்களால் அப்புறப்படுத்த முடியவில்லை" என ஆதங்கத்துடன் கூறினார் கோவிந்தம்மா.
அரகண்டநல்லூர் கிராமத்தில் எங்கு திரும்பினாலும் பெண்களின் அழுகுரலும், ஆதங்கத்துடன் கூடிய பேச்சுமாக இருக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் சிறுமியான தனுஸ்ரீ பெருவெள்ளம் ஏற்பட்ட டிசம்பர் 1ம் தேதி தாங்கள் உயிர் தப்பியதை நினைவு கூர்ந்தார். அரசுப் பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் இவர், தனது புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறுகிறார். 2 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இன்றி இருக்கிறோம் என்கிறார் தனுஸ்ரீ.
உடுத்திருக்கும் உடையைத் தவிர அனைத்தையும் வெள்ளத்தில் இழந்துவிட்டதாகக் கூறுகிறார் ராஜம்மா (ETV BHarat) இதே பகுதியில் வசிக்கும் ராஜம்மா பேசும் போது,"3 மாதங்களுக்கு முன்பு தான் தாங்கள் புதிய வீடு கட்டி குடிபோனோம். வீடு மொத்தமும் இருந்த பொருட்கள் வெள்ளத்தோடு போய்விட்டது" என்கிறார். "வெள்ளம் வந்த டிசம்பர் 1ம் தேதி இரவு 12 மணிக்கெல்லாம் எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வரத்தொடங்கியது. நாங்கள் வீட்டின் மேல்த்தளத்தில் ஏறி நின்று காப்பாற்றுமாறு கூக்குரலிட்டோம். எங்களைப் போன்றே அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் ஆங்காங்கே வீடுகளில் மொட்டை மாடிகளில் மழையில் நனைந்தவாறே நின்று உயிர் தப்பினர்" என அதிர்ச்சி நீங்காமல் கூறுகிறார் ராஜம்மா. கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க அரசு தயாராக இருக்கும் நிலையில், எங்களுக்கு குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளனர் எனவும் அவர் குறைபட்டுக் கொண்டார்.
இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானோரிடம் கியாஸ் சிலிண்டர் , சமையல் பொருட்கள், உடைகள் என எதுவுமே மிஞ்சவில்லை. அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், யாரேனும் உணவுப் பொருட்களைக் கொடுத்தால் கூட சமைத்து சாப்பிட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
மக்களின் நிலவரத்தை எடுத்துக்கூறும் ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் கள நிலவரம் (ETV Bharat Tamil Nadu) வரலாறு காணாத வெள்ளம் குறித்து நம்மிடம் பேசிய ராமசந்திரன் மற்றும் குருராஜன் ஆகியோர் தங்கள் அனுபவத்தில் 1972ம் ஆண்டு, இதே போன்ற வெள்ளத்தை பார்த்திருப்பதாகக் கூறினர். "1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தற்போது உள்ள வெள்ளத்தை விட அதிகமாகத் தான் இருந்தது. ஆனால், தண்ணீர் அதிகமாக திறந்து விட்டதால் தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. 1972-ல் இப்பகுதியில் பெரியளவில் வீடுகள் இல்லை, அதனால் தண்ணீர் வேகமாக சென்றுவிட்டது. தற்போது வந்த வெள்ளத்திற்கும், அந்த வெள்ளத்துக்கும் பெரிதளவில் வித்தியாசம் இல்லை" என அவர்கள் தெரிவித்தனர்.
அரகண்டநல்லூரிலிருந்து 40 கி.மீ தொலைவில், இதே தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருக்கும் இருவேல் பட்டு கிராமத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சென்ற போது சிலர் சேற்றால் அடித்த வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகின. ஆனால் இது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் நடைபெற்றது என திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, அரகண்டநல்லூரை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், 67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டதாகவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு உணவு, பால் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி நிலவரப்படி 132 வீடுகள் முழுமையாகவும், 728 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.